உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு!

நிருபர் பரீதா


உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு!


1000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு இந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கி.பி. 1010-ம் ஆண்டு , ராஜராஜசோழனால் கட்டப்பட்டு, முதல் குடமுழுக்கு நடத்தப்பட்டது. பிறகு 1997-ல் திமுக ஆட்சியில் குடமுழுக்கு நடைபெற்றது. அதற்குப் பிறகு 23 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகள்



  • 1000 ஆண்டுகளைக் கடந்து தமிழகத்தின் அடையாள சின்னமாகக் கருதப்படுகிறது தஞ்சை பெரிய கோயில்.

  • பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில் என்றும் ராஜராஜேஸ்வரர் கோயில் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

  •  

  • புவியின் சுழற்சிக்கேற்ப, தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் தொழில்நுட்பம் உடையது.

  • கோயிலின் கோபுரத்தின் கலசம் உள்ள மேல் கூரை 80 டன் எடையுள்ள, ஒரே கல்லால் ஆனது.

  • ஒவ்வொரு கல்லிலும் கலைநயம், சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள் உள்ளன.

  • 216 அடி உயரம் கொண்ட கோயில் கோபுரத்தின் அஸ்திவாரம் வெறும் 5 அடி தான்.

  • முழுவதும் கற்களால் ஆன பெரிய கோயிலானது 1,40,000 டன் எடை கொண்டது எனக் கட்டிடக் கலை வல்லுநர்களால் கூறப்படுகிறது.

  • ஆலயத்தின் எதிரே உள்ள நந்தி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. ராஜராஜசோழனால் நிறுவப்பட்ட நந்தி சிலை மாற்றப்பட்டு, தற்போது மராட்டியர்கள் வைத்த நந்தி சிலை தான் உள்ளது.

  • விமானம் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட பரதநாட்டிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

  • பெருவுடையார் கோயில் இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

  • கட்டிடக்கலை ஓவியர்களுக்குச் சான்றாக அற்புதமாய் விளங்குகிறது.


விழாவின் சிறப்பம்சம்



  • எட்டாம் கால பூஜையை ஒட்டி, குடமுழுக்கு விழாவில் தங்க முலாம் பூசப்பட்ட, ராஜகோபுரம் மீது புனித நீர் ஊற்றப்பட்ட போது கருடன் வட்டமிட்டது. அதைப் பார்த்த பக்தர்கள், நமச்சிவாயா வாழ்க எனக் கூறிப் பரவசம் அடைந்தனர்.

  • அதைத் தொடர்ந்து மற்ற கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதனையடுத்து தீபராதனை காட்டப்பட்டது.

  • தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு நடைமுறைகள் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெற்றன.

  • மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து தரிசனம் பெறுகின்றனர்.

  • விழாவையொட்டிப் பாதுகாப்புப் பணியில் 5,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.